×

தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு இருப்பதால், ஆற்றுப் படுகைகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன. மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அதாவது கடந்த 25ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களில் இருக்கும் நீர்த்தேக்கங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர் இருப்பு குறைந்துள்ளன. பாசன நீர், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்தி பாதித்துள்ளது. நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் சேமிப்புத் திறனில் 30 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட குறைவு. கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

அதுமட்டுமின்றி, ‘எல் நினோ’ காலநிலை காரணமாக, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்தாலும் சில இடங்களில் கனமழை, சில இடங்களில் மழை இல்லை. நாட்டின் கிழக்கு மாநிலங்களான அசாம், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நீர் இருப்பு ஓரளவு சிறப்பாக இருந்தாலும், மற்ற பகுதிகளில் மோசமானதாக உள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருக்கும் சுமார் 42 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில், அவற்றில் 29 சதவீதம் வரை தண்ணீர் இருந்தது. தற்போது வெறும் 17 சதவீதமாக குறைந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மேற்கு இந்தியாவிலும் இதே நிலைதான். அங்குள்ள 49 நீர்த்தேக்கங்களில், பத்து வருட சராசரி 32.1 சதவீதமாகவும், வறண்ட நீர் மட்டம் 38 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், இம்முறை 31.7 சதவீதமாக குறைந்துள்ளது. பிற ஆறுகளை காட்டிலும், காவிரி ஆற்றுப் படுகை மற்றும் மகாநதி மற்றும் பென்னா நதிகளுக்கு இடையே கிழக்கு நோக்கிப் பாயும் பல ஆற்றுப் படுகைகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன. வெயில் சுட்டெரிப்பதாலும், கோடையின் உக்கிரம் அதிகரித்து வருவதாலும் நிலைமைகள் மேலும் மோசமடைந்து வருகிறது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கின்றன. பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் மின் தேவை அதிகமாக இருந்தபோதிலும், தற்போது நீர்மின் உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாடு முழுவதும் உள்ள 150 முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 31% அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த வாரம் 33% ஆகவும், அதற்கு முந்தைய வாரம் 35% ஆகவும் இருந்தது.

தென்மாநிலத்தில் உள்ள 42 நீர்த்தேக்கங்களின் சராசரி நீர் கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும். சமீபத்திய ஆய்வின்படி மேற் குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 8.865 பில்லியன் கன மீட்டர் அளவுக்கான தண்ணீர் மட்டுமே காணப்படுகிறது. இது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 17 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளாகத் தென்மாநில நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 23 சதவீத தண்ணீர் இருந்து வந்தது. அதிலும் கடந்த 2023ம் ஆண்டில் 29 சதவீத தண்ணீர் இருப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது 17 சதவீதம் மட்டுமே தென்மாநில நீர்த்தேக்கங்களில் தண்ணீர் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் போதிய அளவு மழை பொழியவில்லை. இதே போன்று மகாநதி மற்றும் பெண்ணாறு படுகைகளுக்கு இடையே கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளிலும் நீர் வரத்து மிகக் குறைவாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை appeared first on Dinakaran.

Tags : southern states ,Tamil Nadu ,New Delhi ,Central Water Commission ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்...